×

பேனா நினைவுச் சின்னம் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜூலை 3ம் தேதி விசாரணை..!

டெல்லி: பேனா நினைவுச் சின்னம் தொடர்பான வழக்கு ஜூலை 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை நினைவு கூறும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் இருந்து 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த பேனா நினைவு சின்னம் அமைக்க 8,551.13 சதுர மீட்டர் அளவிலான இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது. மேலும், பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் மூலம் கடிதம் அனுப்பியிருந்தது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக மீனவர் நல்லதம்பி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்; சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம்; நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு ஜூலை 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை 3ம் தேதி நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்சு துலியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

The post பேனா நினைவுச் சின்னம் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜூலை 3ம் தேதி விசாரணை..! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Pen Memorial ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...